21/04/2012

தமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் – அரசு அமைப்பா?

இந்த கட்டுரையை தொகுத்த - ஹீலர்.அ.உமர் பாரூக் ,M.Acu, D.Ed (Acu) . அவர்களுக்கு நன்றி.

தமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு அக்குபங்சரிஸ்ட்டுகளுக்கு பதிவு வழங்கி வருவதாக கேள்விப்பட்டு நண்பர்கள் தொலைபேசியிலும், இ.மெயிலிலும் அழைத்து தெரிவித்தார்கள். இந்த அமைப்பில் பதிவு செய்யும் உறுப்பினர்களின் (பதிவுக்கட்டணம் ரூ.25,000) பெயரை தமிழ்நாடு அரசு கெஜெட்டில் வெளியிடுவதாகவும் கூறினார்கள். இந்த அமைப்பு குறித்தும், கெஜெட் வெளியீடு குறித்தும் ஒவ்வொரு அக்குபங்சரிஸ்ட்டும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

ஒரு மாநில அரசு மருத்துவக் கவுன்சில் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்றால் முதலில் சட்ட வரைவின் மாதிரி தயார் செய்யப்பட்டு, சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். அதன் பின் கவுன்சிலுக்கான முழு சட்ட திட்டங்களும் தயார் செய்யப்பட்டு சட்டமன்றத்தின் அங்கீகாரத்தோடு அந்த அமைப்பு நிறுவப்படும். சட்டமன்றக்கூட்டம் இல்லாத இடைக்காலத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அரசு ஆணைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு, அங்கீகாரம் அளிக்கப்படும். இதுதான் ஒரு கவுன்சில் உருவாக்கப்படுகிற முறை. ஒரு தனி நபரோ அல்லது சில நபர்களோ இணைந்து உருவாக்குகிற அமைப்பிற்கு கவுன்சில் என்று பெயர் வைக்கக்கூடாது. (இந்த அடிப்படையில் தான் நாம் நடத்தி வந்த மரபுமுறை அக்குபங்சர் கவுன்சில் என்ற அமைப்பை அரசு விதிகளின் படி கலைத்துவிட்டோம்). அரசு கவுன்சில் மாதிரியான கட்டமைப்பை வைத்துக் கொண்டு ஒரு தனிநபர் துவக்கும் அமைப்பு எக்காலத்திலும் கவுன்சில் ஆக முடியாது.

அக்குபங்சருக்கான கவுன்சில் உருவாக்கப் பட்டிருந்தால் அது குறித்த அரசு ஆணை வெளியிடப்பட்டிருக்கும். அப்படி ஒரு ஆணையும் தமிழ்நாட்டில் இதுவரை வெளியிடப்படவில்லை. உதாரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் அக்குபங்சருக்கான அரசு கவுன்சில் ஒன்று 1996 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அப்போது மேற்கு வங்க அரசால் அரசாணை வெளியிடப்பட்டு அரசு கெஜெட்டிலும் அந்த அரசாணை (எண்:14, 1996) வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அரசு கவுன்சில் மாநில அரசால் இப்படித்தான் நிறுவப்படும்.



ஆனால் தமிழ்நாட்டில் அக்குபங்சர் குறித்த அரசு ஆணையோ, அரசு குறிப்போ, கெஜெட் அறிவிப்போ இது வரை வெளியிடப்பட்டதில்லை. அப்படி இருக்கும் போது தமிழ்நாட்டில் அரசு கவுன்சில் செயல்பட வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு அக்குபங்சர் கவுன்சில் தமிழக அரசால் உருவாக்கப்படவும் இல்லை.

தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் என்ற அமைப்பு தஞ்சாவூரில் உள்ள சில நபர்களால் அமைக்கப்பட்ட சங்கம் ஆகும். சங்கம் அமைப்பதற்கு 11 உறுப்பினர்களும், பதிவுக்கட்டணமும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் சங்கத்தை தங்கள் மாவட்டத்திலேயே பதிவு செய்யலாம். நம்மூரில் செயல்படும் பூக்கடை வியாபாரிகள் சங்கம் முதல் ரசிகர் மன்றங்கள் வரை சங்கப்பதிவு சட்டங்களின் படி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஆகும். ( தமிழக அரசில் பதிவு செய்யப்படும் சங்கங்கள் 1975 ஆம் ஆண்டு சட்டப்படியும், மத்திய அரசில் பதிவு செய்யப்படும் சங்கங்கள் 1860 ஆம் ஆண்டு சட்டப்படியும் பதிவு செய்யப்படுகிறது.) இப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கத்தின் பெயர் தான் “தமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில்”. மற்றபடி இதற்கும் தமிழக அரசிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. இன்னும் சொல்வதானால் இலங்கை திறந்தவெளிப்பல்கலைக்கழகம் என்ற உலகமகா போலி நிறுவனத்தை தமிழகத்திற்கு 1990 களில் அறிமுகம் செய்த அதே குழுவினர்தான் இந்த கவுன்சிலையும் நடத்தி வருகிறார்கள்.

அப்படியானால் இந்த தனியார் அமைப்பில் இணையும் உறுப்பினர்களின் பெயர்கள் எப்படி தமிழ்நாடு அரசு கெஜெட்டில் வெளிவருகிறது என்ற கேள்வி எழலாம். தமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் தன் உறுப்பினர்களை கெஜெட்டில் அறிவித்திருக்கிற நகல் இதோ:



முதலில் கெஜெட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். மத்திய அரசிற்கும், ஒவ்வொரு மாநில அரசிற்கும் தனித்தனியான அரசிதழ்கள் (கெஜெட்) உள்ளன. அந்தந்த மாநில அரசின் துறை மூலம் இந்த கெஜெட் வெளியிடப்படுகிறது. இது பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. பகுதி ஒன்றில் அரசின் நேரடி வெளியீடுகளும், பகுதி இரண்டில் அரசு சுகாதரத்துறையின் அறிவிப்புகளும் வெளியாகும். இவ்வாறு ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி வெளியீடுகள் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பகுதி 4 பிரிவு 4 என்பது தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் அறிவிப்புகளை வெளியிடும் பகுதி ஆகும். இந்தப் பகுதியில் தான் பெயர் மாற்றம், மதம் மாற்றம் போன்ற அறிவிப்புகள் வெளியாகும். இப்பகுதியில் யார் வேண்டுமானாலும், அரசு விதிகளுக்கு உட்பட்டு எந்த அறிவிப்புகளை வேண்டுமானாலும் வெளியிடலாம். அரசு நேரடியாக எந்த ஒரு அறிவிப்பையும் இப்பகுதியில் வெளியிடாது.

இப்போது மேலே உள்ள கெஜெட்டை உற்றுப்பாருங்கள். பகுதி 4 பிரிவு 4 என்ற பக்கத்தில் தமிழ்நாடு அரசு கவுன்சிலின் உறுப்பினர்களின் பெயர்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இந்த அமைப்பு மட்டுமல்ல ரசிகர் மன்றங்கள் உட்பட எந்த அமைப்பு வேண்டுமானாலும் தங்கள் உறுப்பினர் பட்டியலை அதற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு வெளியிடலாம்.

கீழேயுள்ள கெஜெட் பக்கத்தில் சிவப்பில் குறியிடப்பட்டுள்ள இடத்தில் என்ன எழுதியிருக்கிறது?



தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனக்களின் விளம்பரங்கள் வெளியிடப்படும் பகுதி என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு நபரின் பெயரை வெளியிடுவதால் மட்டும் அவரை அரசு அங்கீகரித்து விட்டது என்று அர்த்தமல்ல.

தமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் என்ற தனியார் சங்கத்தில் உறுப்பினராக விரும்புபவர்கள் அதில் இணைந்து கொள்ளலாம். ஆனால் அது ஒரு அரசு அமைப்பு என்றும், கெஜெட்டில் வெளியிடுவதால் அதன் உறுப்பினர் அரசு அங்கீகாரம் பெற்றவராவார் என்றும் யாராவது கூறுவதை நம்ப வேண்டியதில்லை.

தமிழ்நாட்டில் அக்குபங்சர் பிராக்டிஸ் செய்வதற்கு எந்த ஒரு சங்கத்திலும் உறுப்பினராக வேண்டிய அவசியமில்லை. அக்குபங்சரை முறையாகப் பயின்று சான்றிதழ் பெற்ற யார் வேண்டுமானாலும் மருந்துகளைப் பயன்படுத்தாமல் பிராக்டிஸ் செய்யலாம்.

அக்குபங்சர் பிராக்டிசிற்கு ஒரே ஒரு கட்டுப்பாடுதான்: “டாக்டர்” என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது.(மத்திய அரசு ஆணை :14025/2003)

அதே போல தமிழ்நாட்டில் பல தனியார் அமைப்புகளும், சில பல்கலைக்கழகங்களும் அக்குபங்சர் கலிவியைக் கற்பித்து வருகின்றன.சான்றிதழ் படிப்பை தனியார் நிறுவனங்கள் நடத்த உரிமை உண்டு. சான்றிதழ் மற்றும் டிப்ளமோ (பட்டய) படிப்புகளை பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றன. தமிழகத்தில் அக்குபங்சர் கல்வியில் 2012 வரை பட்டங்கள் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவில் முதன்முறையாக கர்நாடக அரசு பல்கலைக்கழகத்தில் பி.அக்கு என்ற மூன்று வருட பட்டப்படிப்பும், எம்.அக்கு என்ற இரண்டு வருட பட்ட மேற்படிப்பும் இந்த ஆண்டு முதல் நடத்தப்படவுள்ளன.

அக்குபங்சர் பயின்ற ஒரே ஒரு சான்றிதழ் இருந்தால் போதும். போலியான சான்றிதழ்களைத் தேடி அக்குபங்சரிஸ்ட்டுகள் அலைய வேண்டியதில்லை. பிற மருத்துவ முறைகளின் பட்டங்களைப் போல தோற்றமளிக்கும் எம்.டி.(அக்கு) போன்ற சான்றிதழ்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்பதையும், இந்திய மருத்துவ பட்டங்கள் சட்டங்களின்( INDIAN MEDICAL DEGRESS ACT) படி செல்லாதவை என்பதையும் அக்குபங்சரிஸ்ட்டுகள் உணரவேண்டும்.

அக்குபங்சர் என்ற அற்புதமான மருத்துவத்தின் பெயரை போலியான சான்றிதழ்களைக் கொண்டு கலங்கப்படுத்த வேண்டியதில்லை.